இலங்கை ஏன் பிச்சை எடுக்கும் நாடாக மாறியது..? யாரும் பேசாத இன்னும் ஒரு உண்மை காரணம் இதோ..!

0

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டில் அவசர நிலையை அறிவித்து இராணுவத்தை கொழும்புக்கு வரவழைத்து இளைஞர்களின் ‘ கோட்டா கோ ஹோம் ‘ போராட்டத்தை சமாளிக்க இராணுவ மயமாக்கலை செயற்படுத்தியதை தென் பகுதி மக்களால் காண முடிந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைக் கட்டுப்படுத்தும் கருவிகளில் ஒன்றாக இராணுவ மயமாக்கலைப் பயன்படுத்தினார். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் கொரோனா தொற்று நோயின் போது அதனை கட்டுப்படுத்தும் பொறுப்பை நாட்டின் இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்தார். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை முழுமையாக  இராணுவ மயமாக்கிய ஜனாதிபதி இவர்.

பொருளாதார அபிவிருத்தி  தொடர்பான ஜனாதிபதி செயல் அணிகளுக்கு இராணுவ அதிகாரிகளை பொறுப்பு வாய்ந்தவர்களாக ஜனாதிபதி நியமித்தார். குறைந்த பட்சம் இரண்டு டசன் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் சிவில் நிர்வாகத்திற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

சுமார் ஒரு லட்சம் 100,000 பேரை இராணுவத்தின் கீழ் இணைத்தது மாத்திரம் அன்றி மேலதிகமாக உத்தியோக பூர்வமற்ற படை அணி ஒன்றை கட்டி எழுப்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்தார்.

அந்த எல்லா நடவடிக்கைகளையும் செயற்படுத்தி சேர் பெயில்  என்பதற்கு இணங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச படு தோல்வியை சந்தித்தார்.  இப்போது முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய முப்படைகளின் பிரதானியுமான  ஜெனரல் சவேந்திர சில்வாவின் பின் பக்கம் தரையில் பொருத்தப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலின் நீட்சியே அரச நிர்வாகத்தின் இராணுவ மயமாக்கல் ஆகும். அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பயங்கர கனவு திட்டமாக இருந்தது.

நாட்டில் 30 வருடங்களுக்கு மேல் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் வடக்கு மற்றும் கிழக்கில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கடுமையான இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது. யாழ். மாவட்ட  வீதிகளில் இராணுவமும் கவச வாகனங்களும் பயணிக்காத நாளே இல்லை என்றே கூற வேண்டும்.

நாட்டில் கல்விக்கு சுகாதாரத்தை விட இரண்டு மடங்கு செலவாகும்…

இலங்கை நாட்டின் மொத்த சனத் தொகை 227 இலட்சம் ஆகும்.  இந்த நாட்டில் முப்படைகளின் தொகை இரண்டு லட்சத்து ஐம்பத்தி ஐயாயிரம் ( 255, 000 ) இணையான இராணுவ எண்ணிக்கை 92, 000 ஆகும். ஆனால் கூடுதலாக 5, 500 மேலதிக படைகள் உள்ளனர்.

2022 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பாதுகாப்புச் செலவு 373 பில்லியன் ரூபா ஆகும். இது 2021 ஆம் ஆண்டை விட இது 14 சதவீத அதிகரிப்பு ஆகும். இது அரசின் மொத்த செலவில் 10 சதவீதத்திற்கும் அதிகமாகும். இது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவீனத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க செலவினங்களுடன் ஒப்பிடுகையில் உலகின் சராசரி போர்ச் செலவு 6.5 சதவீதம் ஆகும்.

யுத்தம் நிறைவு பெற்று 13 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இலங்கை தனது இராணுவச் செலவையோ இராணுவ பலத்தையோ குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இலங்கை இராணுவத்தில் 19 பல சேனா அல்லது இராணுவ பிரிவுகள் உள்ளன. அவற்றில் 16 இராணுவ பிரிவுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டு அமைந்துள்ளன.

2022 ஆம் ஆண்டில், இராணுவத்தை முன்னிலைப்படுத்தி நடாத்தப்பட்ட கணக்கெடுப்பில் 142 நாடுகளில் இலங்கை 79 வது இடத்தில் இருந்தது. ( www.globalfirepower.com )

முழு நீதி மன்றத்தின் செலவை விட ரகசியக் கணக்கின் செலவு அதிகம்…
நீதி அமைச்சின் செலவினத் தலைப்பை விட பாதுகாப்பு அமைச்சின் இரகசிய செலவினத் தலைப்பு மற்றும் தொகை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தலைப்பின் கீழ் செலவினங்கள் தணிக்கை செய்யப்பட மாட்டாது மற்றும் பொது மக்கள் மற்றும் சிவில் புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட உளவுத் துறை தகவல்களுக்கு சன்மானமாக பணம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்தக் கணக்கின் மூலம் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் மொஹமட் சஹாரான் குழுமத்திற்கு செலுத்தப்பட்ட பணம் கண்டு பிடிக்கப்படவில்லை. அதற்கு காரணம் இந்த இரகசிய வங்கிக் கணக்கு ஆகும். இந்த பணம் வடக்கின் சில பகுதிகளில் பௌத்த மத மாற்றத்திற்கும் பௌத்த மயமாக்கலுக்கும் பயன்படுத்தப்படலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த நிதியை முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டாலும், அது குறித்த உறுதியான குறிப்பிடத்தக்க விவரங்கள் எதுவும் இல்லை. ( ஒரு முறை இராணுவத் தளபதி இந்த எழுத்தாளரிடம் தனது புலனாய்வுப் பணிப்பாளர் அந்தக் கணக்கில் உள்ள வருடத்தின் மொத்தச் செலவை தனக்குத் தெரிவிக்கின்ற போதும், இராணுவத் தளபதியிடம் அது பற்றிய விவரங்களைக் கூடத் தர மாட்டார் என்று கூறினார். )

இந்த மறைக்கப்பட்ட வரவு செலவு காலனித்துவத்தின் பின் விளைவாகும். ஆனால் இப்போது பல பிரிட்டிஷ் காலனி நாடுகள் இந்த செலவினத்தை தணிக்கைக்கு அதாவது ஒடிட் செய்ய உட்படுத்தியுள்ளன. இந்தியாவிலும், பிரிட்டனிலும், இந்த செலவினத் தலைப்பு இப்போது தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.

பிரச்சனை அளவு மட்டும் அல்ல..

இராணுவ மயமாக்கல் என்பது ஒரு பகுதியில் எத்தனை துருப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதை மாத்திரம் வைத்து கணிக்கத் கூடியது அல்ல. சிவில் நிர்வாகத்தில் எந்த அளவிற்கு இராணுவ திணிப்பும் செல்வாக்கும் உட்பட்டுள்ளது என்பதும் ஒரு தீர்க்கமான காரணி ஆகும்.

வட மாகாணத்தில் முன்னாள் இராணுவத் தளபதிகள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் உள்ளன.

இந்த பரவலான இராணுவ மயமாக்கலின் விளைவுகள் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி உள்ளன. வீதிகள், சந்தைகள் மற்றும் பாடசாலைகளில் இராணுவ சிப்பாய்களை தொடர்ந்து சந்திப்பதால் தமிழர்கள் தமக்காகவும் தமது பிள்ளைகளுக்காகவும் அச்சம் கொள்கின்றனர்.

இராணுவ மயமாக்கல் என்பது வெளித் தோற்றத்தில் மாத்திரம் அன்றி நிலத்தடி தோற்றத்திலும் தெரியும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் தொலைபேசி இலக்கங்கள் இராணுவத்திற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை இடம்பெற்று விவரம் கேட்கப்படுகிறது. மேலும், இராணுவ விவசாய பண்ணைகளில் இவ்வாறான நபர்கள் பணி நியமிக்கப் பட்டுள்ளனர். மற்றும் ஒரு குழு இராணுவத்தின் புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏதேனும் போராட்டங்கள் நடந்தால் அது குறித்து விசாரணை நடத்தி அந்த சம்பவங்களை பகிரங்கமாக வீடியோ பதிவு செய்கின்றனர்.

ஒரே ஒரு புத்த பிக்கு மாத்திரம் இருக்கும் அபூர்வமான பௌத்த விகாரை…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கல் பௌத்த மத விரிவாக்கம் மற்றும் கட்டாய மத மாற்றத்துடன் தொடர்பு உடையது. கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருட்களைத் தேடுவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியானது பௌத்த பிக்குகள் மற்றும் இராணுவ அதிகாரிகளைக் கொண்டதாகும்.

வடக்கு மாகாணத்தில் உள்ள பௌத்த தொன்மைகள் தமிழ் பௌத்த கலாச்சாரத்திற்கு சொந்தமானது. ஆனால் அதெல்லாம் இப்போது ஆக்கிரமிப்பு மதமாக ராணுவத்தின் பாதுகாப்பில் கட்டப்பட்டு வருகிறது. வடக்கு மாகாணத்தில் இன்றும் ஒரே ஒரு துறவியும் இராணுவ முகாமும் கொண்ட ஆலயங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

வடக்கில் உள்ள ஒவ்வொரு இராணுவ முகாமிலும் ஒரு அரச மரம் ‘ போ கஸ் ‘ ஒரு விகாரையும் உள்ளது. ஒரு ‘போ கஸ்’ அரச மரம் வளர்ந்தவுடன் அது நிரந்தரமாக நின்று விடும். தமிழ் பௌத்தர்கள் இன்று அரிதாகவே உள்ளனர். எனினும் அந்தப் பகுதிகளில் சிங்கள பௌத்த இராணுவம் பாரிய மற்றும் நிரந்தர முகாம்களை நிறுவி நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர்.

சிவில் சமூகம் திறந்த வெளியில் பயமுறுத்தப்படுகிறது…
வடக்கு மாகாணத்தில் இராணுவம் சிவில் சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அச்சுறுத்தல், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் இராணுவ மயமாக்கலின் மற்றும் ஒரு அம்சமாகும். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் இயக்கப்படும் முச்சக்கர வண்டிகள் இவ்வாறான அமைப்புகளுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

தென் மாகாணங்களில் பாடசாலை நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை முப்படைகளும் இராணுவமும் ஏற்பாடு செய்வதில்லை. அவர்கள் பள்ளிகளுக்குச் சென்று விரிவுரை வழங்குவது இல்லை. ஏழை பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை பொருட்களை நிவாரண உதவியாக வழங்குவது இல்லை. ஏழை குடும்பங்களுக்கு மானியம் வழங்குவது இல்லை. வெசாக் போன்ற கொண்டாட்டங்களை இராணுவம் ஏற்பாடு செய்வதில்லை. இத்தகைய நடவடிக்கைகள் சிவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது. ஆனால் வடக்கு மாகாணத்தில் இராணுவமே அனைத்தையும் செய்கிறது.

தென் மாகாணங்களில் இவ்வாறான செயற்பாடுகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொலிஸ் கடமைகளை இராணுவத்திற்கு பகிர்ந்து அளிப்பது இராணுவ மயமாக்கலின் ஒரு பயமுறுத்தும் அறிகுறியாகும். காவல் துறையும் ஆயுதப் படைகளும் வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாகும். சட்டத்தின் ஆட்சியைப் பேணுவது காவல் துறைக்கும், தேசிய பாதுகாப்பை பேணுவது முப்படைகளுக்கும் சொந்தமானது.

வட கிழக்கு மாகாணங்களில் உள்ள பல சுற்றுலா விடுதிகளும் ஆயுதப் படைகளுக்கு சொந்தமானவை. பெரிய விவசாய பண்ணைகளையும் ஆயுதப் படைகள் வைத்திருக்கிறார்கள்.

இராணுவ மயமாக்கலின் மற்றும் ஒரு அம்சம், பாதுகாப்புப் படையினரால் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கப்படுவது. சமீப காலமாக இன்னும் பல தமிழர் நிலங்களை அபகரிக்கும் முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இது கவலை தரக் கூடிய விடயம்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சிவில் நிர்வாகத்திற்கு உட்படு இருக்க வேண்டியவை.

ஆனால் வடக்கு மாகாணத்தில் இது போன்ற சிவில் விவகாரங்களில் முப்படைகளும் தலையிடுகின்றன. இது தெளிவாக சிவில் ஆட்சியின் இராணுவ மயமாக்கல் ஆகும். சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு என்பது வடக்கில் வழமையான நிகழ்வாகும். தற்போது அது நிரந்தரமான நடை முறையாக நாடு முழுவதும் மாறி உள்ளது.

இரண்டு பொது மக்களுக்கு ஒரு ராணுவ வீரர்.

நாட்டில் இடம்பெற்ற 30 வருட போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டம். அங்கு 60, 000 ராணுவ வீரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது நாட்டின் மொத்த இராணுவ சக்தியில் 25 சதவீதம் ஆகும். முல்லைத்தீவு மாவட்டத்தில் வெறும் 130, 000 மக்கள் தொகை உள்ளது. இது நாட்டின் மக்கள் தொகையில் 0.6 சத வீதமாகும். ஒவ்வொரு குடி மகனுக்கும் இரு ராணுவ வீரர் இருப்பதை இந்தப் புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இது அங்கு நிலை கொண்டுள்ள விமானப் படை மற்றும் கடற் படைக்கு மேலதிகமான தொகையாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 30, 000 ஏக்கர் காணி இராணுவத்தின் கீழ் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வசம் இருந்த மற்றும் ஏனைய அரச காணிகளில் பெரும்பாலானவை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இராணுவ மயமாக்கல் இந் நாட்டில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை காலில் போட்டு மிதித்து, அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கி உள்ளது. இராணுவ மயமாக்கலின் உண்மையான நிலையைக் கண்டு அறிவது மிகவும் கடினம் என்று பல அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஊடகங்களின் மௌனமான நிலை..
இராணுவ மயமாக்கல் பாரிய மனித உரிமை மீறல் ஆகும். இன்னும் ஒரு சோகம் என்னவெனில் இந்த நாட்டில் சிங்கள ஊடகங்கள் இந்த பயங்கரமான இராணுவ மயமாக்கல் திட்டத்தில் சதியால் மௌனித்து நசுக்கப்பட்டுள்ளன.

ஐந்து லீற்றர் பிளாஸ்டிக் போத்தலில் நசுக்கி வைக்கப்பட்ட வானத்தில் இருந்து விழுந்த நாக் பாம்பை பார்வையிட்டு தரிசிக்க வரிசையில் மக்கள் நிற்கும் நாட்டில், பல்லாயிரக் கணக்கானோர் தம்மிக்க பணியை குடிக்கப் போராடி வரிசையில் நிற்கையில், ராஜபக்ஷவின் பிரச்சாரம் ஆயிரக் கணக்கானவர்களை முட்டாளாக்கி, ‘மஞ்சள்’ அணிந்து போட்டிகளைக் காண ஆயிரக் கணக்கானவர்களை அனுப்பி வைத்த சாகசங்களை புரிந்து ஊடகங்களுக்கு நாட்டில், அதுவும் வடக்கில் உண்மையான இராணுவ மயமாக்கலை வெளிச்சமிட்டு காட்டுவது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் இவற்றை மூடி மறைக்கும் குப்பை ஊடகங்களே அதிகம்.

இலங்கை இன்று எதிர் நோக்கும் நெருக்கடியில் இருந்து விடுபட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் இராணுவ பாதுகாப்பு செலவைக் குறைப்பதும் ஒன்று, ஆனால் மக்களிடம் ஜனரஞ்சக அரசியலைப் பின்பற்றுவதால் எந்த அரசியல் கட்சியும் அதைப் பற்றிப் பேசுவதில்லை.

– எழுதியது சுனந்த தேசப்பிரிய–

Leave A Reply

Your email address will not be published.