தொட்டியில் ரோஜா வளர்ப்பு…!

0

முன்னுரை

உள்ளங்களை கொள்ளை கொள்ளும் வசீகரமான அழகாலும், நீண்ட மலர்க் காம்புகளில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் வனப்பாலும், ‘மலர்களின் ராணி’ என்று சிறப்பித்துக் கூறப்படும் ரோஜா மலரானது, முக்கியமான ஒரு அழகு மலர்ப்பயிராகும். பெரிய பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் வீட்டுத் தோட்டங்களிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் தொட்டிகளில் வளர்ந்து, மலர்ந்த ரோஜாக்கள், நடைபாதைகளின் இரு பக்கங்களிலும், வராண்டா, போர்டிக்கோ, மாடிப்பகுதி என வீட்டின் பல்வேறு பகுதிகளில் பலவாறு வைக்கப்பட்டு அழகு சேர்க்கப் பயன்படுகின்றன. இத்தகைய கவின்மிகு ரோஜாவை தொட்டிகளில் வளர்க்கும் நுட்பங்களை இங்குக் காண்போம்.

தொட்டி வளர்ப்புக்கு உகந்த குணாதிசயங்கள்

மிக உயரமாக வளராததாகவும், ஒழுங்காக எல்லாப் பக்கங்களிலும் கிளைகளைப் பரப்பி அதிகமாகப் பூக்கும் தன்மையுடைய ரகங்களையே தொட்டிகளில் வளர்க்கத் தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்ந்த ரோஜாச் செடியானது நடுத்தர உயரத்தில் ஒழுங்கான வட்ட வடிவமுடன் இருக்க வேண்டும். செடிகளை நடவுச் செய்வதற்கு 10-14 இன்ச் அளவுள்ள தொட்டிகளை தேர்வு செய்து நட வேண்டும்.

தொட்டி வளர்ப்புக்கு உகந்த இரகங்கள்

மார்கரெட், மாண்டுசுமா, ஜான்.எப். கென்னடி, டெல்லி ராணி, ரம்பா, சார்லஸ்டன், கிமாங்கினி, குயின் எலிசபெத், சம்பிரா ஆகிய இரகங்கள் மேற்குறிப்பிட்ட தொட்டிகளில் வளருவதற்கு உகந்த குணாதிசியங்களை கொண்டுள்ளதால் இவை தொட்டி வளர்ப்புக்கு மிகவும் உகந்த இரகங்களாகும்.

தொட்டிகளில் உரக்கலவை நிரப்புதலும் நடுதலும்

மூன்று பங்கு மண், ஒரு பங்கு மக்கிய எரு, ஒரு பங்கு மக்கிய இலை உரம் ஆகியவற்றை கலந்து தொட்டிகளில் நிரப்ப வேண்டும். வேர்விட்ட குச்சிகள் அல்லது மொட்டுக்கட்டிய ரோஜா செடிக் கன்றுகளை செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் தொட்டிகளில் நடவு செய்ய வேண்டும். ஒரே தொட்டியில் பல வண்ண மலர்கள் உற்பத்தி செய்யும் ரோஜாவை உருவாக்கும் வேர்க்குச்சியில், பலநிற ரோஜா மொட்டுகளை மொட்டுக்கட்டிய கன்றுகளைத் தொட்டியில் நடவு செய்ய வேண்டும்.

நீர் பராமரிப்பு

பொதுவாக புதிதாக நடப்பட்ட ரோஜாக்களுக்கு நன்கு வேர்பிடிக்கும் வரை அடிக்கடி நீர் விட வெண்டும். வளர்ந்த பின் தேவைக்கேற்றபடி நீர் விட்டால் போதுமானது. ஆனால் நீரானது தொட்டிகளில் நீண்ட நாட்களுக்கு தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம்.

உரமிடல்

ஒவ்வொரு வருடமும் மூன்று இன்ச் அளவுக்கு தொட்டிகளில் உள்ள மண்ணை நீக்கிவிட்டு, நன்கு மக்கிய எருவை கொண்டு அதை நிரப்ப வேண்டும். கவாத்து செய்தபின், புதிய தளிர்கள் தோன்றியதும், ஒவ்வொரு செடிக்கும் 10 கிராம் கால்சியம், அம்மோனியம் நைட்ரேட், 15 கிராம் சூப்பர், 5 கிராம் பொட்டாஷ் (எம்.ஒ.பி) ஆகியவற்றை இட வேண்டும்.

கவாத்து செய்தல்

செப்டம்பர் இறுதியில், ஒவ்வொரு ஆண்டும் தொட்டி ரோஜாக்களை கவாத்து செய்ய வேண்டும். 6 முதல் 9 இன்ச் உயரத்தில் மூன்று அல்லது நான்கு முதிர்ந்த குச்சிககளை விட்டுவிட்டு மற்றவற்றைக் கவாத்து செய்து நீக்க வேண்டும். கவாத்து செய்தபின் போர்டோ பசையை வெட்டுப் பகுதிகளில் தடவி பூஞ்சணத் தாக்குதலைக் தடுக்க வேண்டும்.

தொட்டிகளில் மாற்றி நடுதல்

மூன்று முதல் நான்கு வருடங்கள் ஒரே தொட்டியில் வளரும் ரோஜாவின் வேர்கள் அளவுக்கதிகமாக வளர்ந்து, இறுகி, நீர் உறிஞ்சுதல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதலைப் பாதிக்கும். இதனால் செடிகள் நோயினால் வாடியதை போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும். இத்தகைய அளவுக்கதிகமாக வளர்ந்த தொட்டிகளிலுள்ள ரோஜாவைக் கவாத்து செய்தபின் தொட்டிகளில் இருந்து பிரித்து, பின்னர் மீண்டும் தொட்டிகளில் புதிய மண் உரக்கலவையை நிரப்பி அதில் திரும்ப நடவு செய்து நீர் விட வேண்டும். இந்த செடிகள் வேர் பிடிக்கும் வரை நிழலில் வைத்து விட்டு பின்னர் வழக்கமான இடங்களில் சூரிய ஒளி படும்படி அவற்றை வைக்கலாம்.

பூ உற்பத்தி

குளிர் காலங்களில் தொட்டிகளை கட்டிடச் சுவரோரம் வடகிழக்கு திசையைப் பார்த்து வைப்பதால், போதிய சூரிய வெளிச்சம் கிடைத்து செடிகள் விரைவில் பூக்க ஆரம்பிக்கும். கவாத்து செய்து 45 முதல் 50 நாட்களில் செடிகள் துளிர்த்து புதிதாக மலர்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும்.

பயிர் பாதுகாப்பு

பொதுவாக முழு பயிர் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கையாக 0.2 சதவீத பெவிஸ்டின் மற்றும் 0.2% நுவக்கிரன் கரைசலை மூன்று வாரங்களுக்கு ஒரு முறை தெளிப்பதால் பூச்சி மற்றும் நோய்த் தொல்லை செடிகளில் இருக்காது. சாம்பல் நோய், பின்னோக்கி கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைப் பூஞ்சாண மருந்து தெளித்தும், அசுவினி, திரிப்ஸ் மற்றும் செதில் பூச்சிகளை 0.2 சதவீத நுவக்கிரன் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

மேற்கூறிய நுட்பங்களைக் கையாண்டு தொட்டிகளில் பூத்து குலுங்கும் ரோஜாக்களை அழகுக்காகவும், கண்காட்சிக்காகவும் (Exhibition) வளர்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.