எமது நாட்டுக்கே உரித்தான தானியங்களை கொண்டு சத்துமா செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு தரமான சத்துணவு கிடைக்கும். சமபோசா போன்ற உணவுகளை வாங்குவதை விட நூற்றுக்கு நூறு வீதமான சத்துணவுகளை வீட்டுத் தோட்டங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இது நிச்சியமாக எமது உடம்புக்கு நிறைவைக் கொடுக்கும்.இது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்கும் செயற்பாடாகும் என கிளிநொச்சியில் தற்போதைய நாட்டின் பொருளாதார சூழலைக் கருத்திற் கொண்டு தானியப் பயிர்ச் செய்கைகளை செய்து வரும் செல்வாநகர் மயில்வாகனம் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
இவர் குரக்கன், கம்பு போன்ற தானிய வகைகளை செய்கை பண்ணுகிறார்.அவருடனான ஒரு கலந்துரையாடல்
கம்பு என்ற தானியப் பயிர் பற்றிக் கூறுவீர்களா?
இது ஒரு தானியப் பயிர். அதிகம் புரதத் சக்திமிக்கது. கம்பங் கூழ் . கம்பங் கஞ்சி போன்ற உணவுகளை தயாரித்து உண்ணலாம். இதனை நான் புதுசாகத்தான் செய்கை பண்ணி விநியோகம் செய்து வருகின்றேன். இப்போது இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூடுதலானளவு செய்து வருகிறேன். கடந்த வருடம் எனக்கு 5 கிராம் கிடைத்தது. அதனைச் செய்கை பண்ணி 50 கிலோ கிராம் உற்பத்தி செய்தேன். இது கிலோ ரூபா 700 தொடக்கம் 750 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.சிறிய பிள்ளைகள் முதல் தாய்மார்கள் எல்லோருக்கும் மிக அவசியமான புரதச் சக்திமிக்க உணவு இது. இதனை மாவுகளோடு சேர்த்து இடியப்பம், பிட்டு, தோசை போன்ற உணவுகளும் செய்யலாம்.சில நாடுகளில் கஞ்சாகவும் காய்ச்சிக் குடிக்கிறார்கள். ஐரோப்பிய நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வந்து வாங்கிச் சென்று சாப்பிட்டு பாராட்டியுள்ளனர்.
குரக்கன் பயிர்ச் செய்கை பற்றிக் கூறுவீர்களா?
குரக்கன் பத்து வருடமாகச் செய்து கொண்டு வருகிறேன்.புரதச் சத்துமிக்கது. மாவு தட்டுப்பாடான நேரத்தில் குரக்கன் மா நல்லதொரு சாப்பாடு. அதிலும் கூடுதலான அறுவடைகள் கிடைக்கின்றன.ஒரு கிலோ குரக்கன் செய்கை பண்ணினால் 1300, 1500 கிலோ கிராம் விளைச்சலைக் பெறலாம்.இதை இரண்டு ஏக்கரில் செய்வேன். குரக்கன் ஒரு வருடத்தில் மூன்று போகங்கள் செய்கை பண்ணுகின்றேன். ஒரு வருடத்தில் மூன்று தடவை இடத்தை மாற்றி மாற்றிச் செய்கை பண்ண வேண்டும். அவ்வாறு இடத்தை மாற்றிச் செய்வதன் மூலம்தான் நிலத்தின் வளமும் நிலத்திலுள்ள நோய்களும் இல்லாமற் போய் விடும். மாறி மாறி செய்வதால் பயிர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். ஒரே இடத்தில் தொடர்ச்சியாகச் செய்யக் கூடாது.
குரக்கன் விதைகள் எல்லாம் பரந்தன் விவசாயத் திணைக்களத்திற்குத் தான் விநியோகம் செய்து வருகின்றேன். அவர்கள் என்னிடம் கொள்முதல் செய்து இலங்கையிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்குத் தேவையானவர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். சந்தையில் விற்பனை செய்வதை விட இவ்வாறு விவசாயத் திணைக்களத்திற்கு கொடுப்பதால் இலாபமும் கூட. ஆனாலும் சந்தையிலும் தாராளமாகக் கொடுக்கலாம். இந்தப் பயிருக்கு சந்தையிலும் நல்ல கேள்வி உண்டு.
நான் விதை உற்பத்திகளை சீரான முறையில் செய்வதால் என்னிடம் இருந்து விவசாயத் திணைக்களம் 10 வருடங்களாக விதைகளைக் கொள்முதல் செய்து வருகிறது, குரக்கன் மட்டுமல்ல. நிலக்கடலை, உழுந்து, பயறு எல்லாவற்றையும் விவசாயத் திணைக்களத்திற்கே கொடுத்து வருகிறேன். இதனை நான் மட்டுமல்ல அநேகர் செய்கிறார்கள். ஆனால் நான் மட்டும் தொடர்ச்சியாக விடாமல் செய்து கொண்டு வருகிறேன்.
கிடைக்கப் பெற்ற விருதுகள்.
எனக்கு மூன்று தடவைகள் தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றன. 2018 இல் இலங்கையில் சிறந்த உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் அன்றைய ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவினால் கந்தளாயில் நடைபெற்ற நிகழ்வில் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டேன். தேசிய விவசாய அபிவிருத்தி சபையினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டியில் இரு தடவைகள் தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டேன். இப்பரிசுகளுக்கான நிகழ்வுகள் பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் விவசாய அமைச்சர் கலந்து கொண்டார். இத்தகைய விருதுகள் கிடைப்பது என்பது என்னுடைய முயற்சிகளுக்கு ஊக்குவிப்பாகவும் பெருமையாகவும் இருக்கின்றது. அதுவும் கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் செய்து பரிசுகளைப் பெற்றுக் கொள்வது தனது மாவட்டத்திற்கு பெருமையைத் தருகின்றது. நான் போட்டிக்காகச் செய்வதில்லை. என் தொழில் விவசாயம்தான்.
மரக்கறிப் பயிர்ச் செய்கையின் ஈடுபாடு தொடர்பில்…
மரக்கறிப் பயிர்ச் செய்கையும் நிறையச் செய்து வருகின்றேன்.மொத்தம் ஏழு ஏக்கர் காணி இருக்கிறது. மரக்கறிப் பயிர்கள் எனும் போது பாகை, பயிற்றை. கத்தரி, கறிமிளகாய் ஆகிய மரக்கறி வகைகளைச் செய்கின்றேன். இவற்றை விவசாயத் திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனையினைப் பெற்றுத் தான் செய்து வருகின்றேன். விவசாய அரச நிறுவனங்களும். தனியார் விவசாய நிறுவனங்களும் விவசாய செய் முறைகளைப் பற்றி ஆலோசனை வழங்குவார்கள். நான் தனியாக என்னுடைய அறிவினை மட்டுமல்ல எல்லோருடைய ஆலோசனைகளையும் பெற்றுத்தான் செய்கை பண்ணி வருகிறேன்.பயிர்களுக்கான கிருமிநாசினி மருந்து வகை நிறுவன அதிகாரிகள் என்னை வந்து சந்தித்து ஆலோசனை வழங்குவார்கள். என்னுடைய விவசாய செய்கை பண்ணும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன். அவர்களும் என்னுடைய ஆலோசனைகளையும் புதிய அனுபவங்களையும் உள்வாங்கிக் கொள்கிறார்கள்.
பல்கலைக்கழகத்தில் இருந்து வந்து எனது விவசாய செய்கையை பார்வையிட்டுச் செல்வார்கள். அடிக்கடி பல்கலைக்கழக மாணவர்களும் வருவார்கள்.
நான் குரக்கன் பயிர்ச் செய்கையை விசிறி விதைப்பதில்லை. வரிசை முறைப்படிதான் நாட்டுவேன். இப்படிச் செய்வதால் களைகளைக் கட்டுப்படுத்தக் கூடிய நல்ல வசதிகள் இருக்கும். 45 சென்றி மீ;ட்டர் இடைவெளியில் வரிசையாக நாட்டுதல் வேண்டும். இவ்வாறு செய்கை பண்ணினால் களைகளைக் கட்டுப்படுத்தி அதிக அறுவடைகளைப் பெற்றுக் கொள்ளலாம். உழுந்து பயிறுகள் எல்லாம் இவ்வாறுதான் செய்கை பண்ணுகிறேன். இந்த ஆலோசனையை விவசாயத் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் தான் வழங்கினார்கள்.
பாகற்காய் போன்றவற்றை ஒரே கொடியில் 18 கிலோ 20 கிலோ அறுவடை செய்வேன். பாகற்காயைச் சுற்றிப் பாதுகாக்க ஒரு நெட் இருக்கிறது. அதை சுற்றிக் கட்டினால் அதற்கு எந்த நோயும் வராது. அதனை பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யலாம். மரக்கறி வகைகளைச் செய்வதோடு தானியப் பயிர்களையும் செய்து வருகின்றேன். பொருளாதார மேம்பாட்டுக்கு இவை எமக்கு உதவியாக இருக்கின்றன.
40 வருட காலமாக விவசாயம் செய்து வருகின்றேன். இதன் மூலம் எங்கள் குடும்பம் தன்னிறைவுடன் வாழ்ந்து வருகின்றது. நான் மனைவி, ஒரு மகள், மருமகன் இரு பேரப்பிள்ளைகள் இருக்கின்றோம். நாங்கள் நான்கு பேரும் முழு நேரமும் குடும்பமாக விவசாயத்தில் ஈடுபடுகிறோம். அதேநேரம் நாங்கள் கூலி ஆட்களைப் பிடிப்பதில்லை. நாங்கள் இரவிலேதான் தண்ணீர் கட்டுவதும் இரவிலேயே தான் அறுவடைகளைச் செய்வோம். அறுவடை நேரத்தில் மட்டும் தான் சில வேளை ஆட்களைப் பிடிக்க வேண்டி வரும். கம்புகளை அறுவடை செய்ய வேண்டும். பின்பு தானியமாக எடுக்க வேண்டும்.
புதிய தொழில் நுட்ப முறைகள் பற்றி?
புதிய தொழில் நுட்பம் என்று வரும் போது பாகல் எல்லாவற்றுக்கும் புதிய நெட் வகையொன்று இருக்கிறது. அதைச் சுற்றிக் கட்டி பராமரிக்கக் கூடியதாக இருக்கிறது. என்னுடைய இந்த தொழில் நுட்ப முயற்சியை பார்த்துத்தான் விவசாயத் திணைக்களம் ஏனைய இடங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்த நெட்டைக் கட்டினால் பாகற்கொடி நோயிலால்லாமல் வளரும். நான் எந்த விவசாயச் செய்கை மேற்கொண்டாலும் ஒரு புதிய தொழில் நுட்ப முறையைக் கருத்திற் கொண்டு தான் செய்து வருகிறேன். என்னை விட நல்லா வடிவாகச் செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அவைகளையும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அவைகளை பார்வையிடுவதற்காக விவசாயத் திணைக்களம் கற்பிட்டி, குளியாப்பிட்டி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டி இருக்கிறார்கள். புதிய தொழில் நுட்ப அறிவுகளைத் தேடிப் படிக்க வேண்டும். அவற்றைப் பார்க்க வேண்டும். அவை மாதிரி பயிர்ச் செய்கை பண்ண வேண்டும் . இப்படி அறிவைப் பெற்றுக் கொண்டால் கூடுதலாக செய்கை பண்ணலாம். குரக்கன் அறுவடை செய்தால் அதனை உரலில்தான் குத்தி எடுக்க வேண்டும்.குரக்கனை வேறு பிரிப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவிதமான மின் இயந்திரமும் இல்லை. ரொம்பக் கஷ்டப்பட்டுதான் செய்கின்றோம்.நெல்லை அறுவடை செய்து சூடு அடிப்பது போன்று குரக்கனைத் தானியமாக பெற்றுக் கொள்ள இயலாது. தனியார் நிறுவனங்களோ இது பற்றி இன்னும் கவனம் செலுத்த வில்லை. கச்சான் பிடுங்குவதற்கு இயந்திரம் இருக்கிறது. உழுந்து அடிப்பதற்குக் கூட இயந்திரம் இருக்கிறது. உழுந்து நிலக்கடலை அதிகளவில் செய்கை பண்ணுகின்றேன். எம்மிடமிருந்து நிலக்கடலை விதைகளை ஒரு கிலோ ரூபா 700க்கு கொள்முதல் செய்வார்கள். தற்போது இன்னும் அறுவடை செய்யவில்லை. விவசாயத் திணைக்களத்திற்கு கொடுப்பதால் நமக்கொரு சந்தோசம் இருக்கிறது. ஏனென்றால் நாடளாவிய ரீதியில் அது விற்பனைக்குச் செல்லுகிறது.
நீங்கள் எதிர் நோக்கிய சவால்கள்?
பசளைகள் இல்லாமலும் மண்ணெண்ணெய் இல்லாமல் நாங்கள் கஷ்டப்பட்டோம். 90 விகிதம் தற்போது பிரச்சினைகள் இல்லை. என்னைப் போல வீட்டுத் தோட்டத்தில் பெரியளவில் இல்லா விட்டாலும் ஓரளவுக்காவது செய்து கொண்டு வந்தால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகவும் திருப்திகரமாகவும் இது அமையும். இது பற்றி ஒவ்வொரு குடும்பமும் யோசித்து வீட்டுத் தோட்டச் செய்கையில் ஈடுபடுதல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிலத்தில் மரக்கறிகளையும் தானியப் பயிர்களையும் செய்தால் ஒரு தன்னிறைவைக் காணலாம்.வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யலாம்.
குரங்குப் பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன.நாம் என்ன செய்யலாம். அவற்றையும் சமாளிக்கத்தான் வேண்டும். வேறு எந்தக் காட்டு மிருகங்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை. தோட்டக் காணிகளில் மரங்கள் இருக்கக் கூடாது. பெரிய காணியில் குரங்குகள் இறங்காது. எதற்கும் வேலிகளுக்கு இடைவெளியே இறங்கப் பார்க்கும். அவதானித்துக் கொண்டு வருகிறோம்.
கிளிநொச்சி ரோட்டரிக் கழகத்தின் யோசுவா அடிகளார் பற்றிக் கூறுவீர்களா?
அவரைக் கண்டால் அவருடன் நிறையக் கதைக்க வேண்டும் என்ற ஆசை. அவர் எல்லா மக்களையும் ஒரு சமநிலையோடு அனுசரித்து ஆட்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு உடையவர். அதுவும் யார் யாருக்கு என்னென்ன உதவி செய்ய வேண்டும் என்று யோசித்துச் செய்வார். அதை விட என்னைப் போல விவசாய முயற்சியாளர்களை நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தி ஊக்கபடுத்தி விடுபவர். அவரைப் பற்றிப் பேசுவதென்றால் நிறையப் பேசலாம். அவருடைய பணிகள் ஏராளம். வியப்புக்குரியது. இலங்கையைப் பொறுத்தவரையில் கம்புச் பயிர்ச் செய்கையை எடுத்துக் கொண்டால் நான் தான் அதிகளவு செய்துள்ளது போல தெரிகிறது. அவர் என்னிடம் வாங்கி வெவ்வேறு விவசாய இடங்களுக்கு கொடுத்து விவசாயச் செய்கையை ஊக்கு வித்துவருகிறார். நான் அவருடன் கதைக்க வேண்டும் போல இருக்கிறது. அவர் நிறைய வேலைப் பளு மிக்கவர். ஆதலால் அவரை அடிக்கடி பேசி அவரைக் கஷ்டப்படுத்தக் கூடாது. அவர் என்னென்ன நிகழ்வுகளில் இருக்கிறாரோ தெரியாது. அடிக்கடி எடுத்து தொல்லைப் படுத்தக் கூடாது. அவர் கிளிநொச்சிப் பிரதேசத்தில் ரோட்டரிக் கழகத்தின் மூலமாக விவசாய மேம்பாட்டுக்காக பாரிய பங்களிப்புக்களைச் செய்து வருகிறார். அவர் விவசாயம் மட்டுமல்ல எல்லா வகையிலான மனிதாபிமான உதவிகளையும் செய்யக் கூடியவர். இல்லாத தானியப் பயிர் வகைகளை பரவலாக எல்லா இடங்களுக்கும் செய்வதற்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கிறார். அவர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைத்தது ஒரு பெரிய வரமாகும். அவரோடு நானும் சேர்ந்து பழகுவது என்பது எனக்கு ஒரு சந்தோசமும் பெருமையும் இருக்கிறது.
நீங்கள் இறுதியாக கூற விரும்புவது?
நான் என்னுடைய காணியில் இடைவிடாமல் தொடர்ச்சியாக பயிர் செய்து கொண்டு இருக்கிறேன். அதாவது ஏழு ஏக்கர் காணியிலும் நாங்கள் சூழற்சி முறையாக பயிர் செய்து கொண்டு வருகிறோம். மிளகாய்ச் செய்கை என்றால் காலம் போகம் சிறுபோகம் என்று எல்லாம் பார்க்க மாட்டோம். நாங்கள் தொடர்ச்சியாக சித்திரையிலும் மிளகாய் நடுவோம். ஆடியிலும் நடுவோம். தொடர்ச்சியாகச் செய்வோம். குரக்கன் நடுவதற்கு கால போகம் என்று தேவையில்லை. எந்தப் பயிர்ச் செய்கைக்கும் கால போகங்களைப் பார்ப்பதில்லை.. நாங்கள் தொடர்ச்சியாக செய்கிறோம்.
—இக்பால் அலி—