விசேட செய்தியாளர் ஒருவரின் வெளிப்படுத்தல்
இலங்கையின் மருந்து ஒழுங்குமுறை மற்றும் அரசு மருந்து கொள்வனவு தொடர்பான நிறுவனங்கள் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால், அந்த நிறுவனங்களின் நியமனங்கள் மற்றும் தீர்மானம் எடுக்கும் செயல்முறைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும்.
2016 ஆம் ஆண்டில், மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்த பேராசிரியர் கிரிஷாந்த வீரசூரிய நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டாக்டர் கமல் ஜயசிங்க நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னரே அந்த நிறுவனத்தில் ஊழல் நடவடிக்கைகள் தலைதூக்கின. அன்றைய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இலங்கையில் வேரூன்றியிருந்த மருந்து மாஃபியாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், தற்போது அரசு மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் மனூஜ் வீரசிங்கவின் காலப்பகுதியில் மருந்து கொள்வனவு செயல்முறைகள் மிகவும் சீரான முறையில் அமைந்தன. இருப்பினும், பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக அவரும் பதவிலகத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழைய ஊழல்வாதி மீண்டும்…
அவர் வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடத்திற்கு, முன்னதாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதே டாக்டர் கமல் ஜயசிங்கவை மீண்டும் நியமிக்க தற்போதைய சுகாதார அமைச்சர் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இந்தச் சதி முயற்சியின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நெருங்கிய சகாக்களான மஞ்சுள ரணவக்க மற்றும் டாக்டர் உபுல் குணசேகர ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போதைய சுகாதார அமைச்சரின் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஞ்சுள ரணவக்க..
மேலும், 2017 ஆம் ஆண்டில் அரசு மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனமானது, மஞ்சுள ரணவக்கவிற்குச் சொந்தமான புலத்சிங்கள பிரதேசத்தில் உள்ள கட்டிடம் மற்றும் நிலத்தை, ஆய்வக வசதி மற்றும் பயிற்சிப் பாடசாலை அமைப்பதற்காக 65 மில்லியன் ரூபாய்க்கு மோசடியான முறையில் கொள்வனவு செய்தது. ஆனால், அந்தச் சொத்து இன்றுவரை எந்தவொரு பயனுள்ள காரியத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை. (அந்தக் கட்டிடம் இங்கே புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது)
அதேபோல், 2025 ஆம் ஆண்டில் மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் சவீன் சேமகேவின் பதவி விலகல் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதிலும் மஞ்சுள ரணவக்க மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாகத் துறையினரிடையே பரவலாகப் பேசப்படுகிறது. இது தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
ஊழல்வாதிகளை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவருவது மக்கள் ஆணையை மீறும் செயல்
ஊழலுக்கு எதிராக மக்கள் ஆணையைப் பெற்ற தற்போதைய அரசாங்கம், இந்தப் பிரச்சினைகள் அனைத்திலும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த அரசாங்கங்களில் பதவிகளை வகித்து, ஊழல் கொடுக்கல் வாங்கல்களில் தொடர்புடைய நபர்களிடம் சுகாதாரத் துறையின் முக்கிய நிறுவனங்களை மீண்டும் ஒப்படைக்க முயற்சிப்பது மக்கள் ஆணையை மீறும் செயலாகும். கடந்த காலங்களில் நடந்த ஊழல் மோசடிகள் இந்த ஆட்சியிலும் தொடர இடமளித்தால், அது மீண்டும் சரிசெய்ய முடியாத தவறாகிவிடும். இந்த நிலைமையைத் தோற்கடிக்க, தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த ஊழல் எதிர்ப்புப் பிரஜைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அரசு நிறுவனங்களுக்கான நியமனங்கள், அதிகாரிகளின் செயற்பாடுகள் மீதான நாடாளுமன்ற மேற்பார்வை, கணக்காய்வுப் பரிசோதனைகள் மற்றும் சுயாதீன மீளாய்வுச் செயல்முறைகளை வலுப்படுத்துவது காலத்தின் தேவையாகும். மக்கள் அரசாங்கம் முன்னோக்கிச் செல்ல வேண்டியது ஊழலுக்கு எதிரான மக்கள் ஆணையை வலுப்படுத்தும் திசையில்தானே தவிர, அதனைப் பலவீனப்படுத்தும் திசையில் அல்ல என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.