கொழும்பு: புதிய தலைமுறையின் போக்குகளுக்கும் கைத்தொழில் துறையின் தேவைகளுக்கும் ஏற்ப, புதுப்பிக்கப்படும் உயர்தர தொழிற்கல்விப் பாடத்திட்டத்தையே நாம் உருவாக்க வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சீர்திருத்தப்படவுள்ள க.பொ.த உயர்தர தொழிற்கல்விப் பாடத்திட்டத்தின் கட்டமைப்பு மற்றும் தரச் சான்றிதழ் வழங்கும் செயல்முறை குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (03) இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்:
-
புதிய வழிமுறைகள்: பாடத்திட்ட மறுசீரமைப்பின் போது அடிப்படை அளவுகோல்களைப் பின்பற்றுவதுடன், அதன் மூலம் உயர்கல்வி பிரவேசத்திற்கான புதிய வழிகளைத் தீர்மானிப்பது குறித்து ஆராயப்பட்டது.
-
கௌரவமான வேலைவாய்ப்பு: முறையாகக் கட்டமைக்கப்பட்ட தரச் சான்றிதழ் மூலம், மாணவர்களுக்குக் கௌரவமான தொழில் வாழ்க்கையை அமைப்பதற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்.
-
நேரடிச் சேர்க்கை (Lateral Entry): முறையாக வடிவமைக்கப்பட்ட தெரிவுச் செயன்முறை மூலம் மாணவர்களை இணைப்பதுடன், உயர்கல்விக்காக ‘நேரடிச் சேர்க்கை’ முறையையும் உள்வாங்க வேண்டும்.
-
சமூக விழிப்புணர்வு: தொழிற்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டார உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.