ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நேருக்கு நேர் போர் களத்தில் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் அதனை செய்தனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடன் பெற்று அதனை மீள செலுத்தாமல் மோசடி செய்தமை தொடர்பில் பேசும் போது, ராஜபக்ஷர்களை நினைவு கூராவிட்டால் அது நாம் எமது பொறுப்பினை தட்டிக்கழிப்பதற்கு சமமாகும்.
மக்களுக்கு எவ்வித பயனும் அற்ற வேலைத்திட்டங்களுக்காக பாரிய தொகையில் கடன் பெற்று, அதனை மோசடி செய்துள்ளனர். இவ்வாறான மோசடிகளின் பலனாக 2022இல் எரிபொருள், எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அவை திரும்பிச் சென்றன.
அது மாத்திரமின்றி அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைமையும் ஏற்பட்டது.