சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் பௌத்த பிக்கு அடாவடி ; தமிழர் பகுதியில் சம்பவம்

0

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை 02 – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியது.குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (13) காலை இடம்பெற்றிருந்தது.

ஜனாஸா நல்லடக்கதிற்கு தடை

புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்மலைக்குடா பகுதியில் இன்று காலை ஆண் ஒருவர் சுகவீனமுற்று மரணமாகியிருந்த நிலையில் குறித்த ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கு மயானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த காணியில் ஜனாஸா நல்லடக்கம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் ஜனாஸா அடக்கத்திற்கு எதிராக புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதியினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் குறித்த ஜனாஸா நல்லடக்கத்தினை நிறுத்தக்கோரியும் புல்மோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு வந்த பிரதேச செயலாளரின் தடையீட்டினால் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

புல்மோட்டை பகுதியில் மக்களுடைய பெருமளவான காணிகளை பூஜா பூமி என்ற பெயரில் குறித்த பௌத்த பிக்கு ஆக்கிரமித்து வருவதாகவும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் இயல்புநிலை பாதிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி குறித்த பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்காக குழி தோண்டப்பட்டபோது புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி குறித்த காணி “பூஜா பூமி” என புல்மோட்டை பொலிஸார் சிலரை அப்பகுதிக்கு அனுப்பி ஜனாஸா நல்லடக்கத்தை தடை செய்திருந்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் தோன்றியது. குறித்த விடயம் பிரதேச செயலாளர் உட்பட பலருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் குறித்த பகுதியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights