குஜராத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில்.. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்!

0

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான விபத்து தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஏர் இந்தியா விமானம் கட்டிடங்களுக்குப் பின்னால் விழுந்து தீப்பிடித்து எரியும் காட்சி அடங்கிய வீடியோ பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில், விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதையும் காண முடிகிறது.

விபத்து பற்றி ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது.

விமானம் விழுந்த இடத்திற்கு காந்திநகரில் இருந்து 3 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் 3 குழுக்கள் வதோதராவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.

 “அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பசுமை வழித்தடத்தை (green corridor) ஏற்பாடு செய்யவும், மருத்துவமனையில் முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்னுடன் பேசி முழு ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்துள்ளார்,” என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி ஓலம்!

தனையடுத்து ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை அகமதாபாத் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, தரையிறக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் வந்து கொண்டிருந்த விமானங்கள் அருகாமையில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights