1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அல்லைப்பிட்டிக்கு இலங்கை இராணுவம் வந்தபோது…..
பிலிப்பு நேரியார் ஆலய வளவிற்குள் அகதிகளாக உட்கார்ந்து இருந்த ‘அல்லைப்பிட்டி, மண்டைதீவு, மண்கும்பான்’ ஆகிய மூன்று கிராம மக்களில் அனைத்து திருமணமான,சில திருமணமாகாத இளைஞர்களின் கைகளிலும் குழந்தைகள் இருந்தன. “பிள்ளை, குட்டிக் காரன் என்றால் பிடிக்க மாட்டார்கள்” என்று எண்ணிய பல இளைஞர்கள் தங்கள் அக்கா, தங்கையின் பிள்ளைகளைக் கையில் தூக்கி வைத்து இருந்தார்கள்.
கோயில் வளவிற்குள் ஒரு இராணுவ சிப்பாய் கூட நுழையவில்லை. அந்தப் படை நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மட்டும் தனது உதவியாளர்கள் இருவருடன் ஆலய வளவிற்குள் நுளைந்து வண.பிதா.சந்திரபோஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி
“13 வயது தொடங்கி 40 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அனைவரையும் என்னிடம் நம்பி ஒப்படையுங்கள். ‘தலையாட்டி’ முன்னால் விட்டு அடையாளம் காட்டி விட்டுப் பத்திரமாக உங்களிடம் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம்! என்று அந்தக் குருவானவருக்கு உறுதி அளித்து விட்டு எனது அண்ணன்,நான், எனது ஒரு தம்பி உட்பட 13 வயது தொடங்கி 40 வயதுக்கு உட்பட்ட சுமார் 200 பேரைக் கைது செய்து மண்டைதீவுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அவர்களில் பலர் 35 வருடங்கள் ஆகியும் இன்று வரை வீடு திரும்பவில்லை. ராணுவம் பிலிப்பு நேரியார் கோயில் வளவைச் சுற்றி வளைத்து நின்ற போது தனது பாதுகாப்புக்காக தனது அக்காவின் மகளைக் கையில் தூக்கி வைத்திருந்த எனது நண்பன் சிவபாலன் இராணுவம் எங்களை வெளியே அழைத்துச் சென்ற போது அந்த அக்காவின் குழந்தையை அக்காவிடமே கொடுத்து விட்டு எங்களுடன் வந்தான். எவ்வளவு உயிர்ப் பயம் இருந்தால் இளைஞர்கள் அக்காவின், தங்கையின் பிள்ளையைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு ‘திருமணம் ஆனவர்கள்’ போல நடித்திருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.![😌]()
![😔]()


எங்களைப் பிலிப்பு நேரியார் ஆலய வளவில் இருந்து தொலை தூரத்திற்கு அஃதாவது கிறீஸ்தவ மதகுரு மற்றும் அந்த ஆலயத்தில் எஞ்சியிருந்த பொதுமக்களுக்கு எங்கள் கதறல் சத்தம் கேட்காத தொலைவுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் எனக்கும் என்னோடு அழைத்து வரப்பட்ட சுமார் 200 பேருக்கும் நடந்ததெல்லாம் எழுத்தில் வடிக்க முடியாதவைகள்.
எனது அண்ணன் உட்பட இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியவர்கள் கண்ணைக் கட்டி அழைத்துச் செல்லப் பட்டது, சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் கூட ‘தர்க்கவியல் ரீதியாக'(Logic) ஒரு காரணம் இருக்கலாம். ஆனால் இராணுவத்தைக் கண்டதும் உயிர்ப் பயத்தின் காரணமாக அக்காவின் குழந்தையைக் கையில் தூக்கி வைத்திருந்த ‘இயக்கத்துடன்’ எந்த வித தொடர்பையும் பேணாத எனது நண்பன் சிவபாலனும், தமிழகத்தில் இருந்து எங்கள் கிராமத்துக்குப் பிழைப்புத் தேடி வந்து எங்கள் உறவினர் ஒருவரின் கடையில் நம்பிக்கைக்கு உரிய ஊழியனாக வேலை செய்து கொண்டிருந்த ‘முருகனும்’
இன்னும் 23 பேரும் “இராணுவத்திற்கு சில வேலைகளில் உதவ வேண்டி இருக்கிறது, 25 பேர் தேவை; எழுந்து வாருங்கள்! இரண்டு நாட்களில் விட்டு விடுவோம்! என்று இன்னொரு ராணுவ அதிகாரியும் தற்போது தமிழ்த் தேசியப் பரப்பில் ஒரு கட்சியால் ‘பாவமன்னிப்பு’ கொடுக்கப் பட்டுள்ள தோழரும் சொன்னதை நம்பி அல்லவா எழுந்து சென்றார்கள்.
அந்த ‘எந்தப் பாவமும் அறியாத25 பேரும் கூட’ 35 வருடங்கள் ஆகியும் இன்று வரை வீடு திரும்பாததை என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது.
செம்மணியில் ‘குழந்தைகளின் எலும்புக் கூடுகளும்’ தோண்டி எடுக்கப் படுவதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அப்பாக்களுடன் அரியாலை, கைதடி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் போது அப்பா, சில வேளை அம்மாக்களுடன் இராணுவத்தால் பிடிக்கப் பட்டு இப்போது புதை குழிகளில் இருந்து எலும்புக் கூடுகளாக மீட்கப் படும் அந்தப் பிஞ்சுகளுக்கும் அஞ்சலி!
பகிரவு.