கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை, ரயில் பாதைகள் தகர்ப்பு: உக்ரைன் இராணுவம் தகவல்

0

கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதையை தகர்த்து விட்டோம் என்று உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முக்கிய 5 விமான படைத் தளங்கள் மீது உக்ரைன் இராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் ஸ்பைடபர் வெப்’ என்ற ரகசிய குறியீடுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக் கூடிய 41 அதிநவீன போர் விமானங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

இந்நிலையில், உக்ரைன் இராணுவம் (உள்நாட்டு பாதுகாப்பு முகமை) நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை, ரயில் பாதைகளை உள்ளடக்கிய மேம்பாலத்தை தகர்த்துவிட்டோம். இதற்காக 1,100 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை பயன்படுத்தினோம். இந்த தாக்குதலில் தண்ணீருக்கடியில் இருந்த பாலத்தின் தூண்கள் சேதமடைந்துள்ளன” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய உயர் அதிகாரி கூறும்போது, “கிரைமியாவுக்கு செல்வதற்கான பாலத்தில் 3 மணி நேரத்துக்கு மட்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பாலத்தில் வாகனப் போக்குவரத்து வழக்கம் போல அனுமதிக்கப்பட்டது” என்றார்.

உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரைமியாவை கடந்த 2014-ம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்தது. தீவுப் பகுதியான கிரைமியாவையும் ரஷ்யாவையும் நேரடியாக இணைக்க 19 கி.மீ. தூரம் கொண்ட ஒரே ஒரு பாலம் மட்டுமே உள்ளது. இது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் குறிப்பிடத்தக்க திட்டமாகும். இதில் சாலை மற்றும் ரயில் என இரு தனித்தனி பாதைகள் உள்ளன. இந்த பாலத்தை கான்கிரீட் தூண்கள் தாங்கி நிற்கின்றன. கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்ய இராணுவம் இந்த பாலத்தின் வழியாகத்தான் உக்ரைனுக்குள் முதல் முறையாக ஊடுருவியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights