இலங்கை அரசின் உண்மை முகம்

0

கனடாவில் மே மாதத்தில் நடைபெற்ற இரண்டு விடயங்கள்
தமிழ் மக்களை மகிழ்வடையச் செய்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தையும் பேரினவாதத் தரப்பினரையும் சினமும் பீதியுமடையச் செய்திருக்கின்றன.

அதிலொன்று கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, தமிழின அழிப்பு நினைவகம்.

மற்றையது கனடாவின் டொரென்ரோவின் ஈழத் தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காப்ரோ நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம்.

அதேநேரம், இந் நடவடிக்கையானது ஏனைய புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் தமிழினப்படுகொலை நினைவுத்தூபிகள் அமைக்கப்படலாம்
என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கியே தமிழர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வகைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆயுத யுத்தம் தொடங்கப்பட்ட காலம் முதல் வடக்கு தமிழர் தாயகப் பகுதியில் இலங்கை அரசினாலும் அதன் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது

இனப்படுகொலைதான் என்பதனை நிரூபிப்பதற்கான முயற்சிகள் அதில் ஒன்றாகும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற தமிழர்கள் மற்றும் தமிழர்களுக்காகச் செயற்படுகின்ற அமைப்புகள் இதனைச் செய்துவருகின்றனர்.

இறுதி யுத்த காலப்பகுதியை மாத்திரமல்ல, போர் நடந்த காலங்களிலும் இலங்கை அரசு இனப்படுகொலையைச் செய்திருக்கிறது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படாதிருந்தாலும், சில நாடுகள் அதனை ஏற்றுக்கொண்டு வருகின்றன.

இதில் ஒரு படிதான், இவ்வாறான உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக அமைந்ததுதான் கனடாவின் செயற்பாடு. அந்தவகையில்தான், தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை இனப் படுகொலையாக என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக கனடா அமைந்திருக்கிறது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஆயுதப் போரின் 2009 மே 18 முடிவு, இலங்கையின் வடக்கு, கிழக்கில் இனப்படுகொலை, முள்ளிவாய்க்கால்  நினைவாகத் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்நாளை தெற்கில் போர் வெற்றிக் கொண்டாட்டமாக இலங்கை அரசாங்கமும் சிங்களப் பெரும்பான்மை மக்களும் மகிழ்ந்து கொள்வது மிகக் கவலையானது.

அந்தவகையில் தான், சொந்த நாட்டு மக்களையே கொன்றொழித்ததனை போர் வெற்றிக் கொண்டாட்டமாக யாரும் கொள்ளமாட்டார்கள். அப்படியானால் இது மற்றொரு நாடு மீதான போர் என்றே இருக்கலாம் என்று சந்தேகிக்கத் தோன்றும்.

இது, இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்ற தீர்மானத்திற்கு கனடா வருவதற்குக் காரணமாகும். கனடாவின் இந்த முடிவு ஏனைய உலக நாடுகளுக்கு இந்த தீர்மானம்மிக்க முடிவுக்கு வருவதற்கு ஏதுக்களை அதிகரித்திருக்கிறது.

மிக முக்கியமாகக் கடந்த 11ஆம் திகதி தமிழின அழிப்பு நினைவுத்தூபி, தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நகர மேயர் பற்றிக் பிரவுணால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டமை பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மே மாதம் 18ஆம் திகதி  முள்ளிவாய்க்கால் நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஷ்டிக்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், இந்த நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகப் பார்க்கப்படுகிறது.

பிரம்டன் நகரில் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டபோது, பல நகர மேயர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொன்சியுலர் காரியாலயம் ஆகியன இந்த நினைவுத்தூபி அமைப்பிற்கு எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளன.

இதில் மற்றொரு முக்கிய விடயம் என்னவென்றால், இராஜதந்திர மட்டத்தில் தலையீடு செய்துள்ள போதும் நிறுவப்பட்டமைதான்.கனடாவின் இந்தச் செயற்பாடானது இலங்கை அரசாங்கத்திற்கும், பேரினவாதிகளுக்கும் பெரும் இடியாக அமைந்திருக்கிறது என்பது இலங்கையின் வெளிநாட்டமைச்சரின் நடவடிக்கை
மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமது எதிர்ப்பைத் தெரிவித்தது மாத்திரமல்லாமல், கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸை அழைத்துப் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத்  இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரத்தில், கனடாவின் பிரம்டன் நகரில் தமிழ் இனப்படுகொலையைக் குறிக்கும் முகமாக நினைவுச் சின்னம் ஒன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததாகவும்,

பிரம்டன் நகர சபையின் இந்த
முயற்சியைத் தடுக்குமாறு கனடாவின் மத்திய அரசைக் கேட்டுள்ளதாகவும்,
இச் செயற்பாடு இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர், 2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கான அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை என்பதனையும்,
2006இல் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததையும், 2024 ஜூனில் மீண்டும் இதனை உறுதிப்படுத்தியதையும் உதாரணம் காட்டியிருக்கிறார்.

அதே நேரத்தில், சர்வதேச அளவில் எந்தவொரு உறுதிப்படுத்தலும் இதுவரை இல்லாத விடயமாக உள்ள இனப் படுகொலையைத் தேர்தல் ஆதாயமாகச் சிலர் பயன்படுத்துவதாகவும் வெளியுறவு அமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்நடவடிக்கையானது, இலங்கையின் புதிய அரசாங்கத்தின் தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுகிறது.இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது 2012களுக்குப் பின்னர் வலுப்பெறத் தொடங்கியிருந்தாலும், இதுவரையில் தமிழர்களும் தமிழர்கள் சார் அமைப்புகளும் எதிர்பார்க்கின்ற நிலையை அடைந்து கொள்ளமுடியவில்லை.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இனப் படுகொலைக் குற்றச்சாட்டை நிராகரித்தே வருகிறது. எந்த அரசாங்கம் வந்தபோதிலும் இதில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
இந்த இடத்தில்தான், இனப்படுகொலை குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்துவருகின்ற இலங்கை அரசிடம் எவ்வாறு நிதியை எதிர்பார்ப்பது என்ற கேள்வி தோன்றுகிறது.

ஒவ்வொரு வருடத்தின் மார் மாதத்திலும், செப்டெம்பரிலும் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு அமர்வுகளிலும் இது பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டாலும் அதற்குப் பிரயோசனம் ஏற்படவில்லை.

இந்த நேரத்தில்தான் கனடாவின் இந்த நடவடிக்கை இலங்கைக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தவகையில்தான், இதன் பிரதிபலிப்பு இன்னும் சிறிது காலத்தில் தெரியும் என்று நம்பவேண்டியிருக்கிறது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புவதாகத் தெரிவிக்கும் இலங்கை அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகள் யாவும் அரசியல் பழிவாங்கல்களாகவும் தமது எதிரிகளை அரசியலிலிருந்து துரத்தும் செயற்பாடுகளுமாகவே இருக்கின்றன.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தற்போது மக்களிடமிருந்து எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. ஒரு இடதுசாரிப் போராட்ட மரபில் வந்த அமைப்பு மக்களின் நலன்களில் முக்கிய கவனம் செலுத்தும் என்ற எண்ணத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பி மேற்கொண்ட செயற்பாட்டுக்கு அரசாங்கத்திடமிருந்து சரியான பிரதிபலிப்பின்மையே அதற்குக் காரணம்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இதற்கு நல்லதொரு உதாரணமாகும். அரசியல் அரைவேக்காட்டுத்தனத்திற்கும் அரசியல் பழிவாங்கல்களுக்கும் தீனி போடுவதற்காக மக்களைப் பயன்படுத்த முயல்வது நாட்டைச் சரியாகவும், திறமையாகவும் வழிநடத்துவதாகாது என்பதுவே யதார்த்தமாகும்.

இலங்கை அரசாங்கத்தின் உண்மை முகத்தினைக் காணத்துடிக்கும் ஒவ்வொருவரும் மனித உரிமைக்கு மரியாதை, உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை, திறமைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறிக்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

அதற்காக வடக்கின் காணிகளைக் கையகப்படுத்தும் வர்த்தமானி மீளப்பெறப்பட்டமையை மாத்திரம் கொண்டு முடிவுகளை எடுக்கவும் கூடாது.

அரசியல் பழிவாங்கலிலேயே மிகக் கவனமாகவும் குறியாகவும் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்னர் எடுக்கவுள்ள நடவடிக்கைகளிலேயே உண்மை முகத்தை நாம் காணமுடியும். பொறுத்திருப்போம். தயாராகவும் இருப்போம்.

லக்ஸ்மன்—

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights