யாழ் நூலக எரிப்பு நாள்!

0
யாழ் நூலக எரிப்பு நாளான இன்றைய தினத்தில் அது பற்றிப் பலரும் நினைவுகூரும் வேளையில் அண்மையில் நந்தன வீரரத்ன அவர்களால் எழுதப்பட்டு, மனோரஞ்சன் அவர்களது மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘யாழ்ப்பாணத்தைத் தீயிடுதல்’ என்ற நூல் நினைவுக்கு வந்தது. அது தொடர்பாக நான் கலைமுகம் 79’ இல் எழுதிய குறிப்பைப் பகிர்வது பொருத்தமென்று நினைக்கிறேன்.
அந்தக் குறிப்பு இது:
கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் இலங்கையில் நின்ற போது கொழும்பில் நண்பர் பௌசர் அவர்களது ஏற்பாட்டில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வைக் கேள்விப்பட்டு அங்கு சென்றிருந்தேன். ஆச்சரியப்படும் விதத்தில் சரிநிகர் கால நண்பர்கள் பலரைச் சந்தித்த ஒரு அற்புதமான நிகழ்வு அது. அந்த நிகழ்வில் இரண்டு நூல்கள் வெளியிடும் வைபவம் நிகழ்ந்தது. அதில் ஒன்றுதான் ‘யாழ்ப்பாணைத்தைத் தீயிடல்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளரும் அரசியற் செயற்பாட்டாளருமான நந்தன வீரரத்ன அவர்களது சிங்கள மொழியில் எழுதப்பட்டு நீண்ட காலத்தின் பிறகு மனோரஞ்சன் அவர்களது மொழிபெயர்ப்பில் வெளியான மிக முக்கியமான நூல்.
நிகழ்வு முடிந்து வந்தவுடன் முதல் வேலையாக நூலை வாசித்து முடித்திருந்த போதும் அதுபற்றி எழுதுவதற்கான அவகாசம் இதுவரை கிட்டியிருக்கவில்லை. நமது நாட்டின் இனப்பிரச்சினை மிக மோசமான வடிவத்தில் தீவிரமடையக் காரணமாகவிருந்த 1981 இல் நடக்கவிருந்த மாவட்ட அபிவிருத்தித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு அன்றைய ஜே.ஆர். அரசாங்கத்தினால், தமிழ் மக்களை அச்சுறுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டு நடாத்தி முடிக்கவென ஆரம்பிக்கப்பட்டு நடாத்தி முடிக்கப்பட்ட ‘யாழ்ப்பாணத்தைத் தீயிடுதல் என்ற’ ஜே.ஆரின் ’தமிழர்களுக்குப் பாடம் படிப்பிக்கும்’ நடவடிக்கை நடந்து இப்போது நாப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த நிகழ்வின் சூத்திர தாரிகளாக இருந்த முக்கிய அரசியற் தலைவர்களில், தீயிடலில் பிரதான பாத்திரம் வகித்து ஒழுங்கமைத்த றணில் விக்கிரம சிங்கவைத் தவிர்ந்த அனைத்துத் தென்னிலங்கைத் தலைர்களும் இப்போது உயிருடன் இல்லை.
அவர் கூட இப்போது மிகக் கெட்டித்தனமாக தன்னை ஒரு இனவாதக் கறை படியாத தலைவர் என்ற பெயருடன் இன்றுவரை அரசியலில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அந்தப் பேரழிவு திட்டமிடப்பட்டமை, ஒழுங்குபடுத்தப்பட்டமை, இரவோடிரவாக நடாத்தப்பட்டமை என்ற அனைத்து விபரங்களையும், தெளிவாக மின்வைக்கும் விதத்தில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூல் இப்போது தான் முதன் முதலாகத் தமிழ் மொழியில் வெளிவந்திருக்கிறது.
இப்போது, அனுர குமார திடாநாயக்க தலமையிலான ஜே.வி.பிக் கூட்டணியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் சூழலில், பின்கதவாலேனும் பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்காக, இந்த எரிப்பின் முக்கிய தலமைச் செயற்பாட்டளரான-சரியாகச் சொல்வதானால் ஜே.ஆரின் நேரடிக் கண்காணிப்பில் செயற்பட்ட பிரதான சூத்திரதாரியான- ரணில் விக்கிரம சிங்க முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு சூழலில் இந்த நூல் பற்றிய அறிமுகம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் மக்களது பிரதிநிதிகளாக தம்மை அறிவித்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்துத் தமிழ் அரசியவாதிகளுக்கும் தமிழ் மக்களின் புதிய தலைமுறையினருக்கும் நடாத்தப்பட்ட வரலாற்று ரீதியான அழித்தொழிப்புப் பற்றிய விபரங்களை இந்த நூல் மிகத் தெளிவாக முன்வைக்கிறது. இந்த நூலின் பெறுமதி என்பது வெறுமனே ஒரு வரலாற்றுத் தகவலை முன்வைப்பது மட்டுமல்ல, நமது நாடு இன்றைய சீரழிந்த நிலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணமாக அமைந்த அன்றைய அரசியலின் அடிப்படைகளையும், அன்றைய ஆளும் வர்க்கத்தின் நோக்கங்களையும் தெட்டத்தெளிவாகக் கிழித்துத் தொங்கவிடும் ஒன்று என்ற முக்கிய பாத்திரத்தையும் கொண்டது.
நூலக எரிப்பு நடந்த காலத்தில் ஒரு பல்கலைக்கழக மாணவனாக, சிதைவடைந்த யாழ் நகரையும், எரிந்து குட்டிச் சுவராகிப் போயிருந்த நூலகத்தையும் உள்ளம் கொதித்துக் கண்ணீர்மல்க அங்கு சென்று கண்டவன் என்ற உணர்வுடன் மூச்சைப் பிடித்துக்கொண்டு இந்த நூலை வாசிக்கும் போது எழுந்த அழுகையை நிறுத்தி நிறுத்தி வாசிக்கவேண்டிய நிலை இருந்தது. உண்மையில் இது ஒரு வெறும் ஆவணம் மட்டுமல்ல. ஒரு அற்புதமான உணர்வெழுச்சியுடனும் தார்மீகக் கோபத்துடனும் எழுதப்பட்ட அருமையான நூல்!.
நூலாசிரியர் தனது முன்னுரையில் இந்த நூலை எழுதத் தூண்டியகாரணங்களை தனது முன்னுரையில், விரிவாக இவ்வாறு முன்வைக்கிறார்:
‘1981 மே மற்றும் யூன் மாதங்களில் வடக்கில் ஆன்றைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு குற்றச் செயலையும் அறியும் வாய்ப்பு அப்போது தென்னிலங்கைக்கு இருக்கவில்லை..ஏனெனில் அப்போது நாட்டின் சிங்கள,ஆங்கில மற்றும் தமிழ்ப் பத்திரிகைகள் எல்லாம்கடுமையான செய்திக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.எல்லாச் செய்தித் தாள்களும் அச்சிடப்படுவதற்கு முன் செய்தி மற்றும் தகவல் அதிகாரியிடமிருந்து (Information Director) முன் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது’
“நாட்டின் பல செய்தித்தாள்கள் தன்னிச்சையாகவே அரசாங்கத்தின் செய்திக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி தமது நாளாந்த செய்திகளை மட்டுப்படுத்திப் பிரசுரிக்க முன்வந்தன. அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட செய்திக் கட்டுப்பாடு முடிவடைந்து இரண்டு வாரங்கள் கடந்தபின்னும் வடக்கில் என்ன் நடந்தது என்பதைஇந்தத் தேசிய செய்தித் தாள்கள் வெளியிடவில்லை என்பதன் மூலம் இது தெளிவாகத் தெரிந்ததுவிடையங்களை நாங்கள் தென்னிலங்கையில் தாங்கள் அறிக்கையிட வேண்டியதன் முக்கியத்துவத்தை அப் பத்திரிகைகளின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் அன்று சரியாக உணராமல் இருந்திருக்கலாம். அல்லது ஜே.ஆர் ஜெயவர்தன ஆட்சியின் வெறுப்புக்கு ஆளாகி தாம் அரச தண்டனைக்கு உள்ளாவதை விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்”
“அந்தச் செய்திகள் பிரசுரிக்கப்படாமல் கட்டுப்படுத்தப்பட்ட விதத்திலிருந்து அந்தக் குற்றச் செயல்கள் ஒரே அரசியற் கும்பலின் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தான் என்பது மிகத் தெளிவாக வெளிப்படுகிறது……………
“ இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ‘அ:த்த’ (உண்மை) என்றசிங்கள செய்தித்தாள் மட்டுமே வடக்கில் நடந்த அந்தக் குற்றச் செயல்களைப் பதிவுசெய்து பிரசுரித்து வரலாற்றுக்கு நீதியையும் நியாயத்தையும் ஒருவகையில் செய்தது. அந்தப் பத்திரிகையின் துணிச்சலான ஆசிரியர் பி. ஏ.சிறிவர்தன இன்று நம்மிடையே இல்லை.இருந்தாலும், அவர் இந்தத் தேசத்தின் மரியாதைக்கு உரியவர் என்று கருதப்பட வேண்டும்……….. அவர் அன்று யாழ்ப்பாணத்தில் நடந்தவற்றை அறிக்கையிடுவதற்காக ஒரு நிருபர் குழுவையே அங்கு அனுப்பி வைத்தார். அது மட்டுமின்றி, செய்தித் தடையின் காரணமாக அரச நிறைவேற்று அதிகாரியின் கத்தரிக்கோலில் சிக்கி பிரசுரிக்க முடியாமல் போன அனைத்தையும், அந்தத் தடை நீக்கப்பட்டதன் பின் மீண்டும் தயக்க்மின்றி அவர் பிரசுரித்தார்.அதிகாரிகளால் கத்தரித்து அகற்றப்பட்ட முக்கிய ஆசிரியர் தலையங்கண்கலைக் கூட முழுமையாக மறுபிரசுரம் செய்ய ஆவன செய்தார்.’’’
இது நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக 1993 வரை தங்களால் யாழ் நூலக எரிப்புப் பற்றிய தகவல்களை விசாரித்தறிவதற்கான எந்த வழிவகைகளையும் கண்டுகொள்ள முடியாத நிலை நிலவியது என்று குறிப்பிடும் ஆசிரியர், 1993 இல் ஒரு ‘யுத்தகள நிருபர்’ என்ற முறையில் அங்கு சென்றதையும், அந்தச் சந்தர்ப்பத்தில் யாழ் நூலக எரிப்புத் தொடர்பான ஆவணங்கள், தகவல்கள் என்பவற்றைத் திரட்டமுடிந்தது என்பதையும் நூலில் விரிவாக விபரிக்கிறார். அவர் தெரிவிக்கும் இன்னொரு முக்கியமான அம்சம் 1994 அங்கு சென்றபோது தான் திரட்டிய தகவல்களை இந்த நூலில் வெளியிட்டிருப்பதுதான். அவர் எழுதுகிறார்:
“ அன்று பொலிஸ் படைக்குள்ளேயே இருந்த அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ குண்டர்கள் யாழ் நூலகத்துக்கு தீ வைத்தபோது காணி ,நீர்ப்பாசன வடிகாலமைப்பு , மாவலி அமைச்சர் கமினி திச நாயக்கவும், கல்வி வேலைவாய்ப்பு, இளைஞர் விவகார அமைச்சர் றணில் விக்கிரமசிங்கவும், கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவும் மீன்பிடித்துறை அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா ஆகியோர் வாடி வீட்டில் இருந்தபடி அங்கு நடந்தவற்றை நேரடியாகக் கண்காணித்துக் கொண்டு இருந்தததை நேரடியாகக் கன்ணால் கண்ட பல சாட்சிகளை அங்கு நாம் சந்தித்தோம்.”
பல முக்கியமான ஆதாரங்கள், நூலகத்தைத் தீயிடுதல் என்ற தலைப்பிலான ஆவணப் படமொன்றைப் பின்நாளில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் உதவியுடன் தயாரித்ததாகவும் குறிப்பிடும் அவர் இரண்டு முக்கியமான அதிர்ச்சியளிக்கும் செய்திகளையும் பதிவு செய்கிறார். ஒன்று தாங்கள் கண்டறிந்த உண்மைகள் அடங்கிய அறிக்கை எழுத்துவடிவில் ராவய இதழில் பிரசுரத்துக்காகக் கொடுக்கப்பட்டபோதும் அது ஆசிரியர் விக்டர் ஐவனால் ஒரு போதும் வெளியிடப்படவோ,அந்த அறிக்கை தமக்குத் திருப்பித் தரப்படவோ இல்லை என்ற தகவல். இரண்டாவது நிர்மலராஜனுடன் இணைந்து எடுக்கப்பட்ட வீடியோப் பதிவுகள்,ஒலிப்பதிவு நாடாக்கள், வி.எச்.எச் கசற்றுக்கள் என்பவற்றை ரீ.என்.எல் தொலைக்காட்சியில் பணியாற்றிய சந்தன சூரிய பண்டா என்பவர் இரவலாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டபோதும் அவை திரும்பவும் ஒருபோதும் தமக்குக் கிடைக்கவில்லை என்ற தகவல். இது தொடர்பான அவரது பதிவு இவ்வாறு முடிகிறது:
“ஆனால், அவை பின்னர் எப்போதுமே எமக்குத் திருப்பிக் கிடைக்கவில்லை. அந்த அடிப்படையில், யாழ்ப்பாண நூலக எரிப்புத் தொடர்பாக நாம் எழுதிய நீண்ட கட்டுரையும், அது தொடர்பாக நாம் எடுக்கவிருந்த ஆவணப் படமும் வரலாற்றின் புழுதிக்குள் மறைந்து போயின”
இந்த நூலை, அவர் இவ்வாறு கூறித் தனது சமர்ப்பண்மாக முன்வைத்து வெளியிடுவதாக அறிவிக்கிறார்!:
‘1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் தீ வைத்து எரிக்கப்பட்டதன் 42 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரவும், அச்சம்பவம் நடைபெற்று 41 ஆண்டுகளின் பின்னர் கொழும்பில் ரணில் விக்கிரம சிங்கவின் வீடு உட்பட 74 அமைச்சர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதனை நினைவுபடுத்தவும் இந்த நூலை ஒரு நினைவுச் சின்னமாக உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்”
முக்கியமான நம்மவர் எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல். எளிய மொழி, இயல்பான வாசிப்புக்குரிய மொழிநடை, மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு என்று எல்லாச் சிறப்புக்களையும் கொண்ட இந்த நூல் ஒவ்வொரு ஈழத் தமிழ் வாசகரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு முக்கியமான வரலாரற்று பொக்கிசம் என்று போற்றப்படவேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை!

(முகநூலில் இருந்து)

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights