இலங்கையில் ஊடகங்களை கைப்பற்றிய லைக்கா குழுமம் தொடர்பாக மூன்று அரச அமைப்புகள் விசாரணை – உயர்நீதிமன்றத்தில் விவாதம் தீவிரம்

0

ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டிருக்கும் லைக்கா குழுமம் இலங்கையில் 12 ஊடக நிறுவனங்களை எவ்வாறு அதன் உடைமையாக்கிக் கொண்டது என்பது குறித்து மூன்று அரச அமைப்புகள் விசாரணையை ஆரம்பித்திருக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சு அரச புலனாய்வு சேவைக்கு அறிவுறுத்தியிருப்பதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறார்.

லைக்கா குழுமத்தின் இணை நிறுவனங்களான பென் ஹோல்டிங் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் பூளூ சமிற் கெப்பிட்டல் மெனேஜ்மென்ட் (பிறைவேட்) லிமிட்டெட் ஆகியவை தொடர்பிலான விசாரணைகளுக்காக குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) நிதிப்புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடியிருப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

லைக்கா குழுமம் உள்ளூர் ஊடக நிறுவனங்களை உடைமையாக்கியது குறித்து இலஞ்ச ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவும் விசாரணையை தொடங்கியிருக்கிறது.

லைக்கா குழுமத்தின் இந்த உடைமைகளுக்கு எதிராக ஊழல் மோசடி மற்றும் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் இயக்கத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷார தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு நீதியரசர்கள் ஜனக்க டி சில்வா, மேனகா விஜயசுந்தர, சம்பத் அபேயக்கோன் ஆகியோரை உள்ளடக்கிய உயர்நீதிமன்ற அமர்வினால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டபோது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தர்மவர்தன இந்த விபரங்களை வெளியிட்டார்.

ஐக்கிய இராச்சியத்தின் லைக்கா மொபைல் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல உள்நாட்டு ஊடக நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு முன்னதாக உகந்த நடைமுறையை பின்பற்றுவதற்கு அரச நிறுவனங்கள் தவறிவிட்டதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உடித்த எகலஹேவ நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களைச் செய்து வாதிட்டார்.

சமர்ப்பணங்களை பரிசீலித்த பிறகு அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம் விசாரணைக்கான திகதியாக எதிர்வரும் டிசம்பர் 02ஆம் திகதியை நிர்ணயித்தது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights