நியூசிலாந்து அணியுடன் அண்மையில் நிறைவடைந்த மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த பெத்தும் நிசங்க உபாதைக்குள்ளாகி தற்காலிக ஓய்வு கோரி தங்குமறைக்குத் திரும்பினார்.
அவர் மீண்டும் துடுப்பெடுத்தாடியோது தனது எண்ணிக்கைக்கு மேலும் 16 ஓட்டங்களை சேர்த்து 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
ஆனால், உபாதையிலிருந்து அவர் முழுமையாக குணமடையாததால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் விளையாடுவது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது. அவருக்கு பதிலாக பெரும்பாலும் இளம் துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க ஆரம்ப வீரராக அணியில் இணைக்கப்படுவார் என நம்பப்படுகிறது.
கடந்த 2023 மார்ச் மாதம் டெஸ்ட் அறிமுகம் பெற்ற நிஷான் மதுஷ்க, 10 டெஸ்ட் போட்டிகளில் ஓர் இரட்டைச் சதத்துடன் 571 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.