ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் குழுநிலை புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.
பி குழுவில் இடம்பிடித்துள்ள இலங்கை அணி தங்களது முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்திய நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சாருஜன் சண்முகநாதனின் அபார சதம் மூலம் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 28.2 ஓவர்களில் 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஏற்கனவே முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்திய இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இன்று 10 மணிக்கு ஆரம்பமான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றால் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.