குசால் மெண்டிஸ் அதிரடி: 3வது போட்டியில் வென்று டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை

0

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3வதும், இறுதியுமான ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20 சர்வதேச தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்து.

3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் மே.இ.தீவுகள் அணி வெற்றியீட்டிய நிலையில் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி இலகு வெற்றியீட்டியது. அதன் படி தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றுபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மே.இ. தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது. அவ்வணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ரொவ்மன் பொவெல் 37 ஓட்டங்களையும், குடகேஷ் மோட்டி 32 ஓட்டங்களையும் பிரண்டன் கிங் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். இலங்கையின் பந்துவீச்சில் மஹேஷ் தீக்ஷன 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஹசரங்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அதன் படி 163 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 10.1 ஓவர்களில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்களை கடந்தது. பின்னர் 18 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 67 ஓட்டங்களையும், குசல் பெரேரா 52 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.

இலங்கை – மே.இ. தீவுகள் அணிகளுக்கிடையில் 2015ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் 4 இருதரப்பு டி20 சர்வதேச தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இரு தொடர்களை மேற்கிந்திய தீவுகள் அணி வென்ற நிலையில், இதில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இந்நிலையில் இலங்கை அணி வெற்றிபெற்று மே.இ. தீவுகள் அணியுடன் 9 ஆண்டுகளின் பின் முதல் டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights