அரச சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை ; நாட்டுக்கு சேவையாற்றியுள்ளோம் – நாமல் !

0

அரச சொத்துக்களை நாங்கள் மோசடி செய்யவில்லை. குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபித்து உலகில் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தாலும் அதை எதிர்க்கொள்வோம்.

எம்மீதான குற்றச்சாட்டுக்கள் வெறும் அரசியல் சேறுபூசலாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இரத்தினபுரி நகரில் இன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்கொண்ட சவால்களை இன்றும் எதிர்க் கொள்கிறோம். நாட்டுக்கு சிறந்த சேவையாற்றியதன் பின்னரே மக்களாணையை மீண்டும் கோருகிறோம்.

தேசிய விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு உரிய வசதிகளை வழங்கினோம்.  இறக்குமதி உற்பத்திகளுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கவில்லை.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்தினால் மாத்திரமே  விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.

எமது அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தி கருத்திட்டங்களையே நல்லாட்சி அரசாங்கம் நிறைவு செய்தது, தற்போதைய அரசாங்கமும் நிறைவு செய்கிறது. பிரதேசங்களுக்கு பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களையே நாங்கள் முன்னெடுத்தோம்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கிடைக்கும் முதலீடுகளினால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கும் பயன் என்னவென்பது பற்றி மாத்திரமே ஆராய்வோம். தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கியே செயற்படுவோம்.

எம்மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது . சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை திரட்டி அவற்றை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

குற்றச்சாட்டுக்களை நிரூபித்து உலகில் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயார்.

எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் ஒரு பகுதி கோப்பு அநுர குமார திஸாநாயக்கவிடம் உள்ளது, பிறிதொரு பகுதி கோப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ளது. ஆதாரம் உள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் இதுவரை நிரூபிக்கவில்லை. ஆகவே எம்மீதான குற்றச்சாட்டுக்கள் வெறும் அரசியல் சேறு பூசலாகவே காணப்படுகிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights