2024ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி மகளிர் டி20 உலகக்கிண்ண தொடரின் திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி இலங்கை மகளிர் அணி தங்களது முதல் ஆட்டத்தில் ஒக்டோபர் 3ஆம் திகதி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஆண்டுக்கான டி20 மகளிர் உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில் நடத்த ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், அங்கே நிலவிய அரசியல் குளறுபடிகள் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி ஒக்டோபர் 3 தொடக்கம் 20ஆம் திகதி வரை ஷார்ஜா, டுபாய் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
தொடரினை நடாத்தும் உரிமை கொண்டுள்ள பங்களாதேஷிற்கும் – ஸ்கொட்லாந்திற்கும் இடையே ஷார்ஜாவில் ஒக்டோபர் 03ஆம் திகதி முதல் ஆட்டம் நடைபெறுகின்றது. இந்திய – பாகிஸ்தான் மோதல் ஒக்டோபர் 06ஆம் திகதி டுபாயில் நடைபெறுகிறது. ஒக்டோபர் 20ஆம் திகதி இறுதிப் போட்டி டுபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.
மொத்தம் 10 அணிகள் பங்குபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் குழு ஏ இல் தொடரின் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை காணப்படுவதோடு, குழு பி இல் பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவை காணப்படுகின்றன.